ராமேஷ்வரம் மாவட்டம், தனுஷ்கோடி சேது தீர்த்தம் கடலில் புஷ்பாஞ்சலி செய்து கடற்கரையில் தியானம் செய்த பிரதமர் மோடி, 3 நாள் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லிக்கு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 19-ம் தேதி சென்னை வந்தார். அன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
நேற்று முன்தினம் திருச்சி சென்ற அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஆன்மீகப் பயணமாக ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார். ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் கடலில் புனித நீராடியப் பின், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தார். இரவில் ராமகிருஷ்ண மடத்தில் தங்கி ஓய்வெடுத்த பிரதமர் மோடி நேற்று காலை 9 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றார். தனுஷ்கோடி செல்லும் வழியில் ஆங்காங்கே குழுமியிருந்த மக்களை பார்த்து கையசைத்தபடியே வாகனத்தில் சென்றார்.

அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவியும், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டும் வரவேற்றனர். தனுஷ்கோடியில் இரு கடல்கள் சந்திக்கும் சேது தீர்த்தம் கடற்கரையில் பல வண்ண மலர்கள் தூவி புஷ்பாஞ்சலி செய்தார். பின்னர் கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்து கடலில் மூன்று முறை தீர்த்தம் தெளித்து பிரார்த்தனை மேற்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தார். பின்னர் கடற்கரையில் அமர்ந்து மூச்சு பயிற்சி செய்து, தொடர்ந்து அரிச்சல்முனை சாலை முடிவு ரவுண்டானாவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த நான்கு முக சிங்க ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பைனாகுலர் மூலம் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா இரு கடல்களையும் இணைக்கும் ராமர் பாலம் மணல் திட்டுகளை பார்வையிட்டார். இதன்பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டு விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற்ற கோதண்டராமர் கோயிலுக்கு சென்றார். கோதண்டராமர் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமி சன்னதி முன்பு புனிதநீர் அடங்கிய கலசம் வைத்து நடத்தப்பட்ட சிறப்பு யாக பூஜையில் பங்கேற்ற மோடி, கலசத்திற்கு மலர் தூவி பூஜை மற்றும் தீபாராதனை செய்து வணங்கினார்.
பின்னர் சுவாமி சன்னதியில் கோதண்டராமருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது சுவாமிக்கு சஞ்சீவி பூஜாரி தீபாராதனை செய்து மோடியின் தலையில் சுவாமி கும்ப மகுடம் வைத்து ஆசீர்வதித்து துளசி தீர்த்தம், விபூதி பிரசாதம் கொடுத்தார். பின்னர் கோயிலுக்குள் இருந்து வெளியே வந்த மோடி, காரில் ஏறி நேராக ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா ஹெலிபேட் தளத்திற்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியை அமைச்சர் மதிவேந்தன், ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன், எஸ்பி சந்தீப் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு பகல் 12.35-க்கு மோடி சென்றார். அங்கு மோடியை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், கலெக்டர் சங்கீதா, மதுரை காவல் ஆணையாளர் லோகநாதன், எஸ்.பி டோங்ரே பிரவீன் உமேஷ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் சீனிவாசன், மதுரை ஆதீனம், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம், காமாட்சிபுரம் ஆதீனம், ஓ.பி.எஸ் தரப்பு எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கிருந்து பகல் 1 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லி புறப்பட்டு சென்றார். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய அரசு இதில் கவனம் செலுத்தாத நிலையில், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடியை கண்டித்து பாம்பன் சாலை பாலத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் மோடியை கண்டித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி நிர்வாகிகள் கோஷமிட்டனர். மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ உள்ளிட்ட 11 பேரை பாம்பன் போலீசார் கைது செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.