அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், அடுத்த குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் 24 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை உள்ளது. அதன் பின்புறத்தில் உள்ள கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் தபால் நிலையம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அந்த பெட்ரோல் குண்டு சிலையின் பின்னால் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மீது பட்டு வெடித்தது. இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடினர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம், சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க அவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் வீரசேகரன், உதவி ஆய்வாளர்கள் உலகநாதன், அழகிரி, காவலர் ராஜா மற்றும் போலீசார் இரவோடு இரவாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அம்பலவாணன் பேட்டை கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் மகன் விஜயராஜ் (20), கோவிந்தசாமி மகன் கிருஷ்ணன் (20), பழனி மகன் சதீஷ் (29), வெங்கடேசன் மகன் வெற்றி (21) என்பதும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியதும் என விசாரணையில் தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அம்பலவாணன்பேட்டை கிராமத்திலும், குள்ளஞ்சாவடி பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பெரும் பதற்றமாக உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.