பெரியபாளையம் அருகே கடை ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய கும்பல். கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பு. ஒருவர் கைது. மேலும் சிலருக்கு போலீஸ் வலைவீச்சு.

திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேநீர், குளிர்பானம், நொறுக்கு தீனி கடை இயங்கி வருகிறது. நேற்றிரவு இந்த கடைக்கு வந்த கும்பல் ஒன்று அங்கு தங்களுக்கு தேவையானதை கடை ஊழியர்களிடம் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே கடையில் கடனுக்கு வாங்கிய நிலையில் மீண்டும் கடன் என கேட்டதால் கொடுக்க முடியாது என ஊழியர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கடை ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது.
அப்போது அவர்களுடன் வந்த பெண் அந்த கும்பலை தடுக்க முயன்ற போது அந்த பெண்ணை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஊழியர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது. மேலும் ஹோட்டலில் இருந்த பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
அதில் ஹோட்டல் ஊழியர் ஷிஹாகு (32) காயமடைந்து ஊத்துக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோட்டலில் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடை ஊழியர் மீது தாக்குதல் நடத்திய தண்டலம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர் மேலும் சிலரை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் கடைக்குள் வந்து கடை ஊழியர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.