தமிழ்நாட்டு மக்கள் பெரிய அளவில் பாமகவுக்கு ஆதரவு தரவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை கட்சிக் கொடியை மருத்துவர் ச.ராமதாஸ் ஏற்றி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:-

பாமக தொடங்கியது முதல் இன்று வரை ஏராளமான சாதனைகளைப் புரிந்துள்ளது. சமத்துவம், சமூக நீதி, சகோதரத்துவம் இந்த 3 கொள்கைகளை உள்ளடக்கிய சமூக ஜனநாயகம் என்ற உன்னதமான கொள்கையின் அடிப்படையிலேயே பாமக தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபட்டு வருகிறது.
ஆனால், தமிழ்நாட்டு மக்கள் பெரிய அளவில் பாமகவுக்கு ஆதரவு தரவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க என்னிடமே வருகின்றனர். நானும் அதற்காகவே போராடுகிறேன். அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

ஆனாலும், தேர்தல் நேரத்தில் பாமகவுக்கு ஆதரவளிக்க மறுக்கின்றனர். ஒரு நல்ல, நேர்மையான, வெகுஜன மக்களுக்காக உழைக்கக்கூடிய கட்சியை கோட்டைக்கு அனுப்பத் தவறுகின்றனர்.
இருந்தாலும், எதிர்காலத்தில் பாமகவின் பின்னால் மக்கள் ஒட்டுமொத்தமாக அணிவகுக்கும் நிலை உருவாகும் போது, ஒளிமயமான தமிழகம் அமைவதும் உறுதி. மின் கட்டண உயர்வு எதிர்பார்த்தது தான். மக்கள் பிரச்சனைகளுக்கு பாமக தொடர்ந்து போராடும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை நிலையச் செயலர் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக செயலர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.