மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உணவளித்து உயிர் காப்பவர்கள் உழவர்கள் தான். அதேநேரத்தில் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தாலும், உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் கடனாளி ஆவதும், ஒரு கட்டத்தில் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் உழவர்கள் தான்.ஆம், உலகத்தையே வாழ வைப்பவன் தான் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை தான் உலகின் பெரும் குற்றம் ஆகும்.உழவர்களின் வாக்குகளை அறுவடை செய்து பல கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட, உழவர்களின் துயரங்களைப் போக்குவதற்காக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. உழவர்களை வாக்கு வங்கியாகவே தமிழ்நாட்டு கட்சிகள் வைத்திருப்பதால், அவர்களின் துயரங்களும் சாபங்களாக தொடர்கின்றன.

இந்த நிலைமையை மாற்றும் சக்தி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் தான் உண்டு.கல்வி, மருத்துவம் ஆகியவற்றுடன் உழவுத் தொழிலுக்காக இடுபொருள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி தான்.உழவர்களுக்கு இடுபொருள் மானியம் வழங்கும் திட்டத்தை முதன்முதலில் வேளாண்மை நிழல் நிதிநிலை அறிக்கையில் முன்வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதைத் தான் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டமாக மத்திய அரசு இப்போது செயல்படுத்தி வருகிறது.
அனைத்து விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம், அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம், பாசனத் திட்டங்களை செயல்படுத்தவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்கவும் தனித்தனி ஆணையங்கள் என ஏராளமான திட்டங்களை உருவாக்கி வைத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இத்தகைய செயல்திட்டத்திற்கு இணையான தொலைநோக்குப் பார்வை தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்பது தான் உண்மை.உழவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால், அது பாட்டாளி மக்கள் கட்சியால் தான் சாத்தியமாகும். அதனால், இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் வரும் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும். அதன் மூலம் உழவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த இளைஞர்களாகிய நீங்களும் பங்களிக்க வேண்டும்.என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.