லோக்சபாவில் அதானி விவகாரத்தை முன்வைத்து இன்று வரையும் அமளி நீடிக்கிறது.
இதனையடுத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது.
இந்த அமர்வின் முதல் நாளில்,
வெளிநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதை குறித்து கேள்வி எழுப்பியது பாஜக.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதிலடியாக காங்கிரஸ் MPக்கள்,
அதானி குழும மோசடிகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர்.
இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கின.
இது மட்டுமல்லாது,
ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தையும் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன.
இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முழுமையாக நடைபெறவில்லை.
கடந்த 15 நாட்களாகவே நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்த சர்ச்சையால் முடக்கப்பட்டிருந்தன.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்றும் லோக்சபாவில் தொடர்ந்து அமளி நீடித்தது.
காங்கிரஸ் எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து வந்தனர்.
காங்கிரஸ் எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். சிலர் தங்களது இருக்கைகள் மீது நின்று முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் சில எம்பிக்கள் சபாநாயகர் இருக்கை நோக்கி சென்று முழக்கமிட்டனர். இத்தகைய அமளி தொடர்ந்து நீடித்ததையடுத்து லோக்சபா மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டு தேசிய கொடி ஏந்தி மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.
இது தொடர்பாக தமிழக இடதுசாரி எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில்,
இந்திய மக்களின் கோடானகோடி பணத்தை சூறையாடும் “அதானி”யின் கூட்டினை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த
நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணை வேண்டுமெனக்கேட்டு கையில் தேசியக் கொடியுடன் நாடாளுமன்ற வாயிலில் இருந்து ஊர்வலம் சென்றோம் என்றார்.
ராஜ்யசபாவிலும் இன்று காலை அமளி நீடித்தது.
இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பகல் 2 மணிக்கு பின்னரும் சபையில் அமளி நீடித்ததால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.

பொதுவாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் இரு சபைகளின் சபாநாயகர், தலைவர் எம்பிக்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது மரபு.
இதனடிப்படையில் இன்றும் தேநீர் விருந்து நடைபெற இருந்தது.
ஆனால், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் தெரிவித்துவிட்டனர்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அமர்வில் சுமார் 100 மணிநேரம் வீணடிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா நடவடிக்கைகள் 133.6 மணிநேரம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 45 மணிநேரம் மட்டுமே நடத்தப்பட்டது.
அதேபோல ராஜ்யசபாவும் 130 மணிநேரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் வெறும் 31 மணிநேரம் மட்டுமே ராஜ்யசபா நடந்தது.
ஒட்டுமொத்தமாக இரு சபைகளிலும் சுமார் 5 மணிநேரம் கேள்வி நேரம் நடைபெற்றதாம்.
அதுவும் லோக்சபாவில் 4 மணிநேரமும் ராஜ்யசபாவில் 1 மணிநேரமும் மட்டுமே கேள்வி நேரம் நடைபெற்றதாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.