நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது சேலம் நெடுஞ்சாலை நகர் வீடு வெறிச்சோடியது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நேற்று நடந்து முடிந்தது.
அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டும், வீட்டில் இருந்தும் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் உள்ளார்.

காலையில் சாமி கும்பிட்ட அவர் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தேர்தல் முடிவுகளை பார்த்தார். தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி முன்னிலையில் இருந்த ஒரு சில இடங்களில் மட்டும் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினார்.

அங்கும் சிறிது நேரத்தில் கட்சி பின்தங்கியதால் கடும் அதிர்ச்சியடைந்தார். ஒன்றிரண்டு இடமாவது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ‘0’ மட்டுமே கிடைத்து தேர்தல் முடிவு அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

குறிப்பாக 12 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடம் வந்ததை அறிந்து விரக்தியடைந்தார். தேர்தல் முடிவுகள் படுதோல்வியை பரிசாக தந்ததால் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தொண்டர்களின்றி அந்த பகுதியே நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

கட்சி நிர்வாகிகள் யாரும் வீட்டுக்கு வரவில்லை. அவரது வீட்டுக்கு முன்பு 4 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பார்க்க வந்த ஒரு சில அதிமுகவினர் கூட, வீட்டிற்குள் செல்லாமல் ஆங்காங்கே நின்றிருந்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.