பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வீடுகளில் கருப்புக் கொடி, கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், பள்ளிகள் புறக்கணிப்பு, தொடர் உண்ணாவிரதம் என பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பரந்தூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முன்வராத திமுக அரசு, அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

விளை நிலங்களையும், நீர் நிலைகளையும் காக்க போராடி வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது பரந்தூர் பகுதி விவசாய மக்களுக்கு திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தங்களின் வாழ்வாதார உரிமைகளை காக்க போராடுபவர்களை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.