பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. மார்ச் 16-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 25-ம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் பிறப்பை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜை நடைபெறும். மேலும் விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவையொட்டியும் கோவில் நடை திறக்கப்பட்டுகின்றனர்.

பல்வேறு பூஜைகள் நடைபெற்று பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி ஆராட்டு உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற நாளைய தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலை மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி சபரிமலையில் நடையை திறந்து வைத்து சிறப்பு பூஜை நடத்தவுள்ளார். அதை தொடர்ந்து 14-ம் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை 9.45 மணிக்கு கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும். 25ம் தேதி 10-ம் நாள் திருவிழா நாளன்று பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது.

பங்குனி மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பம்பா நதிக்கரையில் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவில் பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்து கொண்டு சபரிமலை ஐயப்பனை கண் குளிர தரிசிக்கலாம்.
ஐயப்பனை பெண்களும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆராட்டு திருவிழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தான், மற்ற விழாக்களை விட பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை காண அனைத்து வயது பெண்களும் ஆவலோடு காத்திருப்பார்கள்.

ஆராட்டு திருவிழாவின் போது, சபரிமலையில் இருந்து தர்மசாஸ்தாவான ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு, ஆராட்டு உற்சவம் நடைபெறும். பின்னர் ஐயப்பனை நன்கு அலங்கரித்து அங்குள்ள விநாயகர் கோவிலின் முன்பு சுமார் 3 மணி நேரம் வரை வைத்திருப்பார்கள்.
அந்த சமயத்தில் அனைத்து வயதுடைய பெண்களும் கலந்து கொண்டு பிரம்மச்சாரிய கடவுளான தர்மசாஸ்தா ஐயப்பனை கண்குளிர தரிசனம் செய்வார்கள். ஆராட்டு திருவிழா நிறைவடைந்த தினம் மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும்.

பங்குனி உத்திர திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
பக்தர்கள் https://sabarimalaonline.org எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.