- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திட்டங்குளத்தைச் சேர்ந்த வசந்தா, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,”எனது இரண்டாவது மகன் அய்யனார், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றான். அதற்கு பிறகு எந்த தொடர்பும் இல்லை. பல இடங்களில் உறவினர்கள் மூலமாக தேடி பார்த்தோம் தகவல் ஏதும் கிடைக்கவில்லை, இந்த நிலையில் எனது உறவினர் மூலமாக எனது மகன் அய்யனார் போன் மூலமாக தொடர்பு கொண்டு அழுது கொண்டே நான் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் காந்திநகர் 5 வது தெருவில் உள்ள சுவீட் கடையில் கொத்தடிமையாக வேலை செய்து வருகிறேன்.
எனது ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்றும் எனக்கு இங்கு வேலைப்பார்பதற்க்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்று சொல்லியும் அனுப்ப மறுக்கிறார்கள்.
வெளியில் செல்லவும் முடியவில்லை, என்னை கொடுமைபடுத்துகிறார்கள். தயவு செய்து என்னை காப்பாற்றவும் என கூறினார். எனவே, என் மகனை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தமிழர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நீதிமன்றமும் அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது

. இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில், ” சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு குஜராத் சென்றது. அங்கு கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் மனுதாரர் குறிப்பிட்ட இடத்தில் பணிபுரிந்த முருகன், கணேசமூர்த்தி, பாண்டி, சரவணகுமார் ஆகியோரிடம் விசாரணை செய்யப்பட்டது எனக் கூறி அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதனைப் பார்த்தபின் நீதிபதிகள், “குஜராத்தில் மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் பணியாற்றியவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. விருப்பத்தின் பேரிலேயே அங்கு வேலை செய்து வருகின்றனர். மனுதாரர் நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவலை தெரிவித்துள்ளார். தற்போது இழப்பீடு வழங்குமாறு கோரும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது. ” என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.