“இந்துக்கள் மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்”-மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

2 Min Read
பழனி முருகன் கோயில்

மதுரை: பழனி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதோர் செல்ல தடை எனக் கூறி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை மீண்டும்
அதே இடத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை பெரும் சர்ச்சையானதால் அகற்றப்பட்ட சூழலில், தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலக பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று என்பதால் எப்போதும் இந்தக் கோயில் திருவிழா கோலம் பூண்டிருக்கும். இதனிடையே, பழனி முருகன் கோயிலுக்கு அருகே பழக்கடை வைத்துள்ள சாகுல் என்பவர் கடந்த மாதம் தனது உறவினர்களை பழனி மலைக்கோயில்
அடிவாரத்தில் உள்ள ரோப் கார் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவர்கள் முஸ்லிம் மதத்தினர் என்பதால் அங்குள்ளவர்கள் சாகுலின் குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை. இந்து சமய அறநிலையத்துறை விதிப்படியும் இந்து அல்லாதோர் பழனி முருகன் கோயிலுக்கு செல்ல முடியாது என்பதே நிதர்சனம்.

ஆனால், சாகுல் அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி கோயிலுக்குள் செல்ல முயன்றார். இதை அறிந்த இந்து முன்னணி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அந்த இடத்தில் குவிந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தலையிட்டு இரு தரப்பையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் “இந்துக்கள் மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பலகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அந்த பலகை அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, “இந்துக்கள் அல்லாதோர் நுழையத் தடை என்ற அறிவிப்பு பலகையை நீக்கியது ஏன்?” எனக் கேள்வியெழுப்பினார். மேலும், இது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும் எனக் கூறிய நீதிபதி, உடனடியாக அந்த அறிவிப்பு பலகையை அதே இடத்தில் வைக்கவும் உத்தரவிட்டார்.

Share This Article

Leave a Reply