- விஜயதசமியை முன்னிட்டு பேராவூரணி குமரப்பா பள்ளியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெல்மணியில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி குமரப்பா பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு எழுத்தறிவித்தல் தினம் இன்று நடைபெற்றது பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10:40 முதல் மதியம் ஒரு மணி வரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அச்சரப்பியாசம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவருமான முனைவர் ஸ்ரீதர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நெல்மணியில் ‘அ’ என எழுதி, குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தார்.
பின்னர் குழந்தைகளுக்கு தேனைத் தொட்டு நாவில் தடவி வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் சேர்க்கை நடைபெற்றது. இதில் திரளான பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில் முன்னோர்கள் வழக்கப்படி, விஜயதசமி நாளில் குழந்தைகளை பாரம்பரிய முறைப்படி பள்ளியில் சேர்த்துள்ளோம் என்றனர்.
விஜயதசமி தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது. இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
உலகை ஆட்டிப் படைத்த மகிசாசூரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் நீடித்த போரானது, விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் மகிசாசுரனை துர்க்கை வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.மைசூரில் மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என அழைக்கப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்த பின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/on-the-occasion-of-the-fourth-saturday-of-the-month-of-puratasi-perumal-departure-and-theerthawari-were-held-in-a-chariot/
தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான நவமியில் சரசுவதியை வணங்கி கல்வி, கலை கருவிகளுக்கு பூசை நடத்தி தசமி அன்று ஆயுதபூசை என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூசை நடத்துகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.