மோடியுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு : எடப்பாடி ஊழல் வழக்கு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

3 Min Read

மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திக்கிறார். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளார். இரு முறை மோடியை சந்திக்க அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி வருகிறார். மோடிக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதேபோல, பாஜ சார்பிலும் நிர்வாகிகள் மோடியை வரவேற்கின்றனர். அதிமுக-பாஜ கூட்டணி முறிந்த பிறகு முதல் முறையாக தமிழகத்துக்கு மோடி வருகிறார். இதனால், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்ற தெளிவு இல்லாமல் இருந்தது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி உள்பட பலர் நடுநிலை வகிப்பதாக கூறி வந்தனர். தேர்தல் நேரத்தில் இருவரும் ஒன்று சேருவார்கள். அதனால் நாங்கள் நடுநிலை வகிக்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனால் தற்போது இரு கட்சியினரும் மீண்டும் சேருவதற்கு வாய்ப்பு இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image
மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

இதனால், பாஜவுடன் யார் யார் கூட்டு சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்தது. இந்நிலையில், மோடி வருகையின்போது அவரை சந்திக்க புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சந்திப்பு நேற்று இரவு வரை உறுதிப்படுத்தவில்லை. அதேநேரத்தில், பாஜவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னதாக அறிவித்து விட்டு வெளியில் வந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அண்ணாமலைக்கும் மோதல் ஏற்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பாஜ பக்கம் நெருங்க ஆரம்பித்தார். அவர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இதனால் மோடியை வரவேற்க அவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மோடியின் நிகழ்ச்சி முடிந்து டெல்லி திரும்பும்போது, மீண்டும் விமானநிலையத்தில் கட்சியினரை சந்திக்கிறார். அப்போதும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மோடி அனுமதி வழங்கியுள்ளார். இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி மீது ஒன்றிய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் தம்முடன் இணைவார்கள்.

அதன் மூலம் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவது, நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று நிரூபிப்பது என்று கருதுகிறார். இதனால் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் துறையில் ரூ.4800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை நடத்த அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதை வைத்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் அவர் தயாரித்துள்ளார். அந்த ஆவணங்களையும் அவர் மோடியிடம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரு நாட்களுக்கு முன்னர் ஊட்டி மற்றும் கோவையில் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், நான் வாயை திறந்தால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்வார் என்று கூறினார். அதனால் அவர் இன்று மோடியிடம் அவர் வாய் திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்தால்தான் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு செல்வார். இதைத்தான் அவர் சிறைக்குச் செல்வார் என்று மிரட்டினார். இந்த மிரட்டலுக்கு காரணம், மோடியை சந்திக்க நேரம் கிடைத்ததும், சில அரசியல் மூவ், பன்னீர்செல்வம் மூலம் எடுக்க மோடி, அமித்ஷா திட்டமிட்டுள்ளதும்தான் என்று கூறப்படுகிறது. இதனால், மோடி, பன்னீர்செல்வம் சந்திப்புக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் வழக்குகள் அடுத்தடுத்த பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மோடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.

 

Share This Article

Leave a Reply