தமிழகத்தில் 2014 – 2023 காலகட்டத்தில் தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது. பெற்ற வரியை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம்” என நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மீது விரோத மனப்பான்மையுடன் பணம் கொடுக்காமல் இல்லை என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சென்னை கோடம்பாக்கத்தில் சாலையோர வியாபாரிகளுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் முத்ரா கடன் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் வழங்கி பேசியதாவது; சரக்கு சேவை வரியை ஒன்றிய அரசு பெற்று கொண்டு முழுமையாக நமக்கு தருவதில்லை என்று சொல்கிறார்கள். மாநில சரக்கு சேவை வரி 100 சதவீதம் உங்களுக்கு தான் வருகிறது. எந்த விதமான உதவிகளும் தமிழக அரசுக்கு மத்திய அரசு செய்வதில்லை என பரப்புரை இருந்து வருகிறது. அதனால் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. தமிழகத்தின் மீது விரோத மனப்பான்மையுடன், நாங்கள் வரி பணத்தை திருப்பி கொடுக்காமல் வைத்து கொள்ளவில்லை.
தமிழகத்தில் 2022 – 2023 வரையிலான 12 மாதங்களில் மாநில சரக்கு சேவை வரி ரூபாய் 36 ஆயிரத்து 353 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக ரூபாய் 32 ஆயிரத்து 611 கோடி, ஒன்றிய சரக்கு சேவை வரியாக ரூபாய் 27 ஆயிரத்து 360 கோடியாகவும் வந்துள்ளது. இதில் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியில் 50 சதவீதமும், ஒன்றியற சரக்கு சேவை வரியில் 41 சதவீதமும் மாநில அரசுக்கு தான் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை வைத்து மாநில அரசு எதுவும் செய்வது இல்லை. தமிழ்நாட்டின் மீது விரோத மனப்பான்மையுடன் பணம் கொடுக்காமல் இல்லை. அந்தந்த தேதியில் பணத்தை கொடுத்து வருகிறோம். சில நேரங்களில் முன்கூட்டியும் பணத்தை கொடுக்கிறோம். இவ்வாறு பேசினார்.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருந்த போது, பெண் ஒருவர், ‘எங்களுக்கு மழை வெள்ள நிவாரண தொகை கிடைக்கவில்லை’’ என்று ஆதங்கத்துடன் பேசினார். அதனால், நிர்மலா சீதாராமன் பேச்சை நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ‘‘உங்களுக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை. விவரத்தை கொடுங்கள் ஏன் தரவில்லை என்று கேட்போம்’ என்று கூறி அந்த பெண்ணை சமாதானப்படுத்தி விட்டு பேச்சை தொடர்ந்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.