நெமிலி அருகே பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற தாய், மகள் இருவரும் கல்லூரியில் சேர முடிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிம்பாக்கத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (49), கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகவேணி (35). மகள் பத்மலோசினி.
இவர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வை தாய், மகள் இருவரும் எழுதினர். நாகவேணி தனித்தேர்வராக தேர்வு எழுதினார்.

கடந்த 6 ஆம் தேதி வெளியான தேர்வு முடிவில் பத்மலோசினி 511 மதிப்பெண் பெற்றும், தாய் நாகவேணி 386 மதிப்பெண்கள் பெற்றும் வெற்றி பெற்றனர். இதுகுறித்து மாணவி பத்மலோசினி கூறியதாவது:-
எனது அம்மா கடந்த 2002 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது தாயும் 11 ஆம் வகுப்பு படிப்பை மேற்கொள்ள முடிவு செய்தார்.

இதனால் தனி தேர்வு மையம் மூலம் பதிவு செய்து எனக்கு பள்ளியில் கற்பிக்கும் பாடங்களை எனது தாய்க்கும் வீட்டில் தினமும் நான் கற்று கொடுத்து, கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு தேர்வு எழுத வைத்தேன். அதில் எனது அம்மா 386 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
அதை தொடர்ந்து இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினோம். அதில் நான் 600-க்கு 511 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். எனது அம்மா 386 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அதை தொடர்ந்து நாங்கள் இருவரும் கல்லூரியில் சேர உள்ளோம்.

நான் படிக்கும் கல்லூரியில் எனது தாயும் சேர்க்க உள்ளேன். இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
தாயும் மகளும் ஒன்றாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஒன்றாக கல்லூரிக்கு செல்ல இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் இருவரையும் வாழ்த்தினர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.