நீட் தேர்வில் ஒரு மாணவரின் பெயரில் ஒரே நாளில் 3 மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாகவும், தேசிய தேர்வு முகமை முறையான தகவல்களை அளிக்கவில்லை என சிபிசிஐடி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் இடைத்தரகராக செயல்பட்டதாக சென்னையைச் சேர்ந்த தருண் மோகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,

அதனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த போது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பல மாணவர்கள் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும், அவர்களது முகவரியில் வெளி மாநிலங்களிலும் இடைத்தரகர்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாணவரின் பெயரில் ஒரே நாளில் ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டுள்ளதாகவும், மூன்று மதிப்பெண்களில் எதில் அதிக மதிப்பெண்ணோ, அதனை வைத்து அரசு கல்லூரியில் மருத்துவர் படிப்புக்கான இடத்தை வாங்கியிருப்பதாகவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் குறித்த விவரங்களை கேட்டு பலமுறை தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பியதாகவும், இதுவரை தேசிய தேர்வு முகமை உரிய விவரங்களை தரவில்லை எனவும், நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
ஆள்மாறாட்டம் என்பது சாதாரண குற்றம் கிடையாது என குறிப்பிட்டுள்ள நீதிபதி புகழேந்தி, இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமையை எதிர் மனுதாரராக சேர்த்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.