காவிரி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்

2 Min Read
டிடிவி தினகரன்

தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் ஒட்டுமொத்த பாசன ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிந்திருக்கும் நிலையில், நடப்பாண்டில் டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லாத சூழல் நிலவுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கடந்த ஆண்டும் நிலவிய தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டிலும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாது என்ற செய்தி டெல்டா பகுதி விவசாயிகளின் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

இயற்கை பேரிடர்கள், பொய்த்துப்போன பருவமழை, அதள பாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர் என சவால்கள் நிறைந்த சூழலிலும் விவசாயத்தை கைவிடாத விவசாயிகளுக்கு, விதை நெல், உரங்கள், இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை மானியத்தில் வழங்கும் வகையில் சிறப்பு குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் படி கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரை உரிய நேரத்தில் பெறாமல், தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்திருக்கும் திமுக அரசு, மேட்டூர் அணையின் நீரை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இதுவரை எந்தவித மாற்று ஏற்பாடுகளையும் செய்யாமல் அலட்சியம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, ஊருக்கே உணவளிக்கும் உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரத்துடன் கூடிய சிறப்பு குறுவைத் தொகுப்புத்திட்டத்தை உடனடியாக அறிவிப்பதோடு, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் மூலம் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Share This Article

Leave a Reply