பாகிஸ்தான் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடந்தது. அதில், 265 தொகுதிகளில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிடிஐ கட்சி தலைவர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 101 தொகுதிகளிலும், நவாசின் பிஎம்எல்-என் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பிபிபி கட்சி 54 இடங்களிலும், எம்க்யூஎம் 17 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் உள்ளன. அவற்றில் 266 இடங்களில் தேர்தல் மூலமும், மீதமுள்ள 70 இடங்களில் 60ல் பெண்கள், 10-ல் சிறுபான்மையினர் என கட்சிகள் பெற்ற தேர்தல் வெற்றியின் பலத்தை பொறுத்து ஒதுக்கப்படும். அதில் ஆட்சி அமைக்க மொத்தம் 169 இடங்கள் தேவை. தேர்தல் நடந்த தொகுதிகள் அடிப்படையில் 133 எம்பிக்களைக் கொண்ட கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும்.
ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் நிலவி வந்தது. இந்த நிலையில், பிபிபி கட்சி தலைவர் பிலவால் பூட்டோ பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தார். அதோடு, நவாஸ் கட்சிக்கு தனது ஆதரவையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

இதனால் திடீர் திருப்பமாக பிஎம்எல்-என், பிபிபி, எம்க்யூஎம், பிஎம்எல்-க்யூ ஆகிய கட்சிகள் இடையே சமரசம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, புதிய பிரதமர் பதவிக்கு தனது சகோதரரும், முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பெயரை பிஎம்எல்-என் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் பரிந்துரைத்தார்.
தனது மகளும் கட்சியின் துணைத்தலைவருமான மரியம் நவாசை பஞ்சாப் முதல்வர் பதவிக்கு நவாஸ் பரிந்துரைத்தார். தற்போது நவாஸ் தலைமையிலான புதிய கூட்டணிக்கு 152 சீட்கள் உள்ளன. மேலும் அடுத்ததாக 60 பெண்கள், 10 சிறுபான்மையினர் தொகுதிகள் சேர்க்கப்பட்ட பிறகு, இக்கூட்டணி 169 இடங்களை பிடிப்பது எளிதாகும்.

அதனால் புதிய ஆட்சி அமைவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது வரும் 26ம் தேதி புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் மத்திய தகவல் செயலாளர் ரவூப் ஹசன் தனது டிவிட்டரில்;-
இரவின் இருட்டில் மக்கள் ஆணை திருடப்பட்டுள்ளது. நாடு மீண்டும் ஸ்திரமற்ற பாதையில் தள்ளப்படுகிறது. அப்போது மக்களால் நிராகரிக்கப்பட்ட கிரிமினல்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஆட்சி அமைப்பது, நாடு கடுமையான சவால்களை எதிர்கொள்ள இருப்பதை காட்டுகிறது’’ என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.