தேசிய திறந்தநிலைப் பள்ளித் தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்குகிறது. என்ஐஓஎஸ் எனப்படும் தேசிய திறந்த நிலைப்பள்ளியானது, பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாதவர்கள் அதற்கு இணையான கல்வியைப் பெற உதவுகிறது.
செகண்டரி எனப்படும் பத்தாம் வகுப்புக்கு இணையான கல்வியையும், சீனியர் செகண்டரி எனப்படும் 12-ம் வகுப்புக்கு இணையான கல்வியையும், தேசிய திறந்தநிலைப் பள்ளி வழங்குகிறது.

ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை இதற்கான தேர்வுகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத் தேர்வு தேதிகள் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கும் செகண்டரி மற்றும் சீனியர் செகண்டரி தேர்வுகள் மே 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை http://sdmis.nios.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் 7 வாரங்களுக்குப் பின்னர் வெளியிடப்படும்.
இத்தகவலை தேசிய திறந்தநிலைப் பள்ளியின் மண்டல இயக்குநர் திரு வி. சந்தானம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.