இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாள் விழா கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99-வது அமைப்பு தினவிழா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுவின் 99-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நல்லகண்ணு செங்கோடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மூத்த தலைவர் டி.கே ரங்கராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் நல்ல கண்ணுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது;

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெரும் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. அதன் பின்னர் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத பெரும் மழை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழக அரசு நிவாரணத்தை வழங்கி வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து ரூபாய் 21 ஆயிரத்து 652 கோடியை தமிழக அரசு கேட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை. இதேபோல தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. சமீபத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழக அரசின் தமிழக மக்களின் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

எனவே தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டு வாழ்த்துச் செய்திகள் கூறியிருப்பதாவது; 99 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இறந்து அகற்றப் போராடிய நல்லகண்ணு நமக்கெல்லாம் ஊக்கமாகவும், உறுதுணையாகவும் இருந்து என்றும் வழி நடத்திட வேண்டும். இவ்வாறு அறிவு கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.