விக்கிரவாண்டி அருகே கணவன் – மனைவி தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கோபிநாத் வயது (32). இவர் மர இழைப்பகம் கடை வைத்து நடத்தி வரும் கோபிநாத்திற்கு பெண்ணரசி வயது (29) என்ற மனைவியும், கிருத்திகா வயது (7) என்ற மகளும், மோனிஷ் வயது (4) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் தனது வீட்டில் இருந்து கோபிநாத் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த பெண்ணரசி, தனது மகள் கிருத்திகா மற்றும் மகன் மோனிஷ் ஆகியோரை துணியால் தூக்கு மாட்டி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது வெளியே சென்றிருந்த கோபிநாத், மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கோபிநாத் அளித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து விட்டு பெண்ணரசி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தங்களது விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தனது 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெண்ணரசியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணரசியின் கணவர் கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.