தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய் பேச்சுக்கு கலவையான கருத்துக்கள்.

2 Min Read
  • இந்த மாநாட்டில் விஜய் பேசியது மற்றொரு ஆடியோ லாஞ்ச் நிகழ்வு போல அமைந்திருந்தது. அரசியல் தலைவரின் உரை போல இல்லை. மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை மனப்பாடம் செய்து, ஏற்ற இறக்கத்தோடு, கை அசைவுகளோடு பேசியிருந்தார் விஜய். மனப்பாடம் என்ற வார்த்தையை தெரிந்தேதான் பயன்படுத்தியுள்ளோம்.

உதாரணத்திற்கு.., பேசிக்கொண்டிருந்தபோது எதற்காகவோ விஜய் அதை நிறுத்த வேண்டியிருந்தது. 5 விநாடிகள் கழித்து பேச்சை தொடர்ந்தபோது, ஏற்கனவே பேசிய வரிகளை ஒரு மாற்றமும் இல்லாமல் பேசினார். இயல்பாக பேசும் யாருமே அப்படி வரிக்கு வரி சொன்னதையே மறுபடி உச்சரித்திருக்க வாய்ப்பு இல்லை. கருத்து ஒத்துப்போகுமே தவிர, மனதிலிருந்து வரும் வார்த்தைகள் என்றால் அவை, மாறிவிடும் தன்மை கொண்டவையாகும். விஜய் பேச்சை பார்த்த ரசிகர், ரசிகைகளுக்கு கூஸ்பம்ப் நிச்சயம்.

- Advertisement -
Ad imageAd image

ஆனால் அரசியல் கட்சித் தலைவராக அது போதாதே. நாளையே ஒரு ப்ரஸ் மீட்டில், எதிர்பாராத கேள்வி வரும்போது, எழுதி வைத்து ஒப்பிக்க முடியாது. அதற்கு தமிழகத்தின் கள நிலவரம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். கட்சியின் பாதை புரிந்திருக்க வேண்டும். விஜயின் பேச்சில் தமிழக வெற்றிக் கழகத்தை முன்னிருத்தி அதிக பேச்சு இல்லை. அதன் மீது பற்றுதலும் தெரியவில்லை. தன்னை முன்னிருத்திதான் அதிக வார்த்தைகள் இருந்தன.

நான் கஷ்டப்பட்டு முன்னேறினேன் என்பது போன்ற வார்த்தைகளில் வெளிப்பட்ட உணர்ச்சி, கட்சிப் பெயரை அவ்வப்போது சொல்லும்போது வரவில்லை. சிறப்பு பேச்சாளர் போல வந்து பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார் விஜய். கட்சியுடனான அவரது பிணைப்பை எதிரொலிக்கும் வகையில் களப் பணியாற்றியதை கவனிக்க முடியவில்லை. ரசிகர்களை தூண்டிவிட எதிரிகள் யார் என்று பேசத் தெரிந்த விஜய்க்கு, ரசிகர்களை தாண்டிய பல கோடி தமிழர்களுக்கான அரசியல் தலைவராக தன்னை முன்னிருத்த தெரியவில்லை.

எல்லோருக்குமான பரந்துபட்ட பாசமுள்ள பேச்சு மாநாட்டில் கேட்கவில்லை. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ் வீடியோவுக்கு கட் செய்து கட் செய்து போட்டுக்கொள்ளும் அளவுக்கு அளவெடுத்து செய்தது போல பேச்சு இருந்தது. திராவிட மாடல் என்று வெளிப்படையாக விமர்சனம் செய்த விஜய், பாஜகவை மட்டும் குறியீடு வைத்து விமர்சித்தது பயத்தை உணர்த்துகிறதா என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜியாருக்கு எதிராக இயல்பாகவே மக்களிடம் ஆதரவு அலை எழுந்தது. ஜெயலலிதா முதல்வரான முதல் தேர்தலின்போது, திமுக மீது ராஜிவ் கொலைக்கு எதிரான கடும் கோப அலை இருந்தது. ஆனால் இப்போது அப்படியான கடுமையான நிலை தமிழகத்தில் இல்லை என்பது யதார்த்தம்.

எனவே விஜயின் வருகைக்கு மக்களிடம் இயல்பான ஆதரவு எழ வேண்டிய அவசியம் இல்லை. கள யதார்த்தம் தெரிந்துள்ளதால், எதிரிகளை அவராகவே கட்டமைத்து அந்த அலையில் ஏறி வர முயலக்கூடும். அதற்கான பேச்சாக இது இருக்கக் கூடும் என்ற பார்வையை புறம்தள்ள முடியாது. கண்டுகொள்ளாமல் விட்டால் காணாமல் போய்விடுவார் என்ற நிலைப்பாட்டை பிற கட்சிகள் எடுத்தால் அந்த யுக்திக்கும் ஆபத்துதான்.

 

 

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/why-didnt-vijays-wife-sangeeta-and-son-and-daughter-come-to-the-conference/

முதல் பேச்சிலேயே முழு தகுதியையும் அளவெடுக்க முடியாது. ஆனால் கவனித்த அளவில் விஜய் இன்னும் அரசியல் தலைவராக உருமாற வெகுதூரம் போக வேண்டியுள்ளது என்பது நிச்சயம்.

Share This Article

Leave a Reply