அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில்,”அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அவரை வலுக்கட்டாயமாக கைது செய்வது சர்வாதிகாரத்தின் உச்சம்.

அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று,திருப்பி தராமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா,நீரவ் மோடிகளின் மீது நடவடிக்கை எடுக்க துப்பற்ற ஒன்றிய அரசு,விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிய செந்தில் பாலாஜியை கைது செய்ய நினைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
பாஜகவை சேர்ந்த எம்.பி பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மல்யுத்த வீரர்கள் கண்ணீர் மல்க தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்திய ஒன்றியத்தையே, உலக நாடுகள் கைக்கொட்டிக் சிரிக்கிறது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் எல்லாம் தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி, அமலாக்கத்துறை, சிபிஐயின் மூலம் எதிர்க்கட்சிகாரர்களை அச்சுறுத்தி வந்த ஒன்றிய அரசு, அதன் தொடர்ச்சியை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு அரசை மிரட்டி பார்க்க நினைக்கிறது.ஆனால், பாஜக ஒன்றிய அரசின் எண்ணம் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது; ஈடேறாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.