புதியதமிழகம்படைக்கமுனைந்துநிற்கும் அமைச்சர்முத்துசாமி!-பேரா.செயராமன்

4 Min Read
பேரா.செயராமன்

மக்களை 24 மணி நேரமும் குடிக்க வைப்பது,மது மயக்கத்தில் முழு நாளும் அழுத்துவது ,மக்கள் அனைவரையும் குடிக்க வைப்பது,
வாங்குவதற்கு காசற்றவர்களையும் குடிக்க வைப்பது,காலையில் வேலைக்கு போய்விட்டு மாலையில் வீடு திரும்பும் போது மட்டும் குடிப்பது என்ற பழக்கத்தை மாற்றி காலையிலேயே குடிக்க வைப்பது, மாலையிலும் குடிக்க வைப்பது,

- Advertisement -
Ad imageAd image

மது மயக்கத்தில் வேலைத்தளங்களில் பணியாளர்கள் சுருண்டு கிடப்பது, நாட்டின் பண்பாடுமிக்க வேலை கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவது பொது ஒழுக்கத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்து விடுவது
என்று ஒரு புதிய தமிழகத்தை படைக்க தம் மகா சிந்தனைகளை அவிழ்த்துவிட்டு இருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

தமிழ்நாட்டை குடிகாரர் மாநிலமாக மாற்ற தீவிர ஆய்வு நடத்துகிறார் அமைச்சர் முத்துசாமி! இவர் நடத்திய ஆய்வின் விளைவுகள் பிரமிக்கத்தக்கவை!மக்களை 24 மணி நேரமும் குடிக்க வைப்பது, 180 மில்லி வாங்க முடியாதவர்களுக்கு 90 மில்லி பாக்கெட்டுகளில் மது அளித்து குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பது,

நண்பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறப்பதற்கு பதிலாக காலை 7:00 மணிக்கே கடையைத் திறந்து, முழு நேரமும் குடிக்க வைப்பது;அனைவரையும் குடிக்க வைப்பது,குடித்துவிட்டு வேலைத் தளத்துக்கு போகும் குற்றச்செயலை ஊக்குவிப்பது,ஒரு “புதிய தமிழகம்” படைக்க முனைந்து நிற்கிறார் அமைச்சர் முத்துசாமி.

இவரது ஆய்வின் முடிவுகள் அதிசயிக்கத்தக்கவை!
40% குடிகாரர்கள் 90 மில்லி மது பாக்கெட்டுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம். அவர்கள் எதிர்பார்ப்பு வீணாகப் போய் விடக்கூடாது என்று அமைச்சர் கவலை படுகிறார்!

ஆகவே இனி 90 மில்லி பாக்கெட்டுகளாக மது விற்பனை! பள்ளிக்கூடத்து மாணவர்களுக்கும் இது எளிதாக இருக்கும்! ஒட்டுமொத்த தமிழ்ச்சமுகத்தையும் குடிகாரச்சமூகமாக மாற்ற அருமையான ஆலோசனைகள்!

தற்போது பகல் 12 முதல் இரவு 10 வரை டாஸ்மாக் கடைகளை திறப்பது என்பது  குடித்துவிட்டு வேலைக்குப் போவதற்குத் தடையாக இருக்கிறதாம்.ஆகவே காலை 7 மணி முதல் 9 மணி வரை கடைகளைத் திறக்கும் மகா உத்தியை கண்டறிந்து இருக்கிறார்.

500 கடைகளை மூடிவிட்டு (22.6.2023) அந்த விற்பனைக் குறைவை ஈடுகட்ட காலை 7 மணிக்கே கடைகளைத் திறந்து விடுவது  என்ற மகத்தான பொருளியல்தீர்வைக் கண்டறிந்து தாம் ஒரு பொருளாதார மேதை என்பதை நிரூபித்திருக்கிறார்.

இப்போது இருக்கும் பார்கள்(Bar) மட்டுமில்லாமல், எங்கெங்கு கூடுதலாக பார்கள் திறக்கலாம் என்று ஆய்வு செய்து அங்கெல்லாம் பார்களைத் திறப்பது என்ற தம் திட்டத்தை  வெளியிட்டு இருக்கிறார்.
அடடா… எவ்வளவு பெரிய மகாசிந்தனை!

மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது இவர்கள் நோக்கமாம். இதன் பொருள் என்ன?
மக்களை அதிகமாகக் குடிக்க வைப்பது;
அனைவரையும் குடிக்க வைப்பது என்பதுதானே.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இல்லாமல் போனதால், குடிகாரக் குடிமக்கள் வேறு எங்காவது போய்விடக் கூடாதே என்று ஆழ்ந்த கவலை அடைந்து இருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

இனி காசு குறைவாக கையில் இருந்தாலும் குடிக்கலாம். கவலைப்பட வேண்டாம்!அவர்களுக்கு 90 மில்லி டெக்னோ பாக்கெட்!
பாட்டிலாக வாங்கி பகிர்ந்து கொள்ளக் காத்திருக்காமல்,
40% குடிகாரர்களுக்கு பாக்கெட்டுகளில் கைமேல் சரக்கு!

காலையில் வேலைக்கு போய்விட்டு மாலையில் மட்டும் குடிக்கும் part time குடிகாரர்கள்;இனிமேல் காலை 7 மணிக்கே குடித்து full time குடிகாரர்களாக முன்னேற அமைச்சரின் மண்டையில் உதித்த மகாசிந்தனை!

காலையிலேயே குடித்துவிட்டு மட்டையாகலாம்,
வேலைத்தளத்திலேயே மயங்கி கிடக்கலாம்,
வேலை என்ற ஒன்றை மறந்து வீதியிலேயே விழுந்து கிடக்கலாம்.

குடித்துவிட்டு வேலைக்கு வருவது இனி குற்றச் செயல் அல்ல;
அது அரசு திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பகுதி,
குடித்துவிட்டு அலுவலகம் வருகிறவர்களை இனி மேனேஜர்கள் கண்டிக்க முடியாது,ஏனென்றால் அது அரசின் திட்டத்திற்கு, நோக்கத்திற்கு எதிரானது!அரசாங்கமே அதை ஊக்குவிக்கிறது!

வேலைத்தளத்தில் குடித்துவிட்டு குட்டி கரணம் அடிப்பது, குப்புற விழுவது,உயரத்திலிருந்து விழுந்து சாவது, வேலை பார்க்காமலே மாலையில் சம்பளம் கேட்டு தகராறு செய்வது,24 மணி நேரமும் குடிபோதையில் ஆழ்ந்து கிடப்பது என்ற புதிய உழைப்புப் பண்பாடு தொடக்கம் பெறுகிறது!

கல்வி அமைச்சர் கல்வியை மேம்படுத்துகிறார்!
சுகாதாரத் துறை அமைச்சர் சுகாதாரத்தை மேம்படுத்துகிறார்!தொழில்துறை அமைச்சர் தொழிலகங்களை அதிகரிக்கிறார்!
அதுபோல மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமி குடியை அதிகரிக்கிறார்! குடிகாரர்களை அதிகரிக்கிறார்!
சபாஷ் சரியான போட்டி!

இதுவரை பார்த்த தமிழ்நாடு வேறு! இனி பார்க்க இருக்கும் தமிழ்நாடு வேறு! குடி குடியை கெடுக்கும் என்று இவர்களே விளம்பரம் செய்கிறார்கள்! ஒட்டுமொத்த தமிழ்க் குடியையுமே கெடுப்பதை கொள்கையாக எடுத்துச் செய்கிறார்கள்!

தமிழ்நாட்டு அரசின் பெயருக்குக் கேடு!மக்களின் வாழ்க்கை தரத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும், பொது ஒழுக்கத்திற்கும்
மிகப்பெரிய சரிவு!இவர்கள் திட்டம் நடைமுறையானால்,
புதிய தமிழகம் நன்னெறிகள் அற்ற நரகமாக இருக்கும்!
ஒழுக்கமற்றுப் பாழாகிப் போகும்! குடிகாரர்கள் குதூகலிக்கும் உலகாக மாறும்!நல்லவர்களும் பெண்களும் நடமாட அச்சப்படும் இடமாக, ஒழுக்கக்கேடர்களின் உல்லாச புரியாக இருக்கும்!

குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது,குடிப்பழக்கத்தை உயர்த்துவது,அனைவரையும் குடிக்க வைப்பது,
அத்தனை நேரமும் குடிகாரர்களாக கிடக்க வைப்பது-
என்பது சாதனையா?இதை தங்கள் கடமையாக கருதும்
அவமானகரமான செயல்பாடுகளில் அமைச்சர்கள் ஈடுபடக்கூடாது!

23-ஆம் புலிகேசிகளைத் தமிழ்நாடு தாங்காது! மன்னிக்காது!
திட்டங்களை யோசிக்கிறீர்கள், விளைவுகளை யோசியுங்கள்!என்று பேராசியர் செயராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share This Article

Leave a Reply