சென்னையில் அனுமதியின்றி 697 விளம்பரப் பலகைகள்: அமைச்சர் நேரு விளக்கம்…

2 Min Read
அமைச்சர் நேரு

சென்னையில் ஆங்காங்கே இருக்கும் 697 விளம்பர பலகைகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அவர் வெளியிட்ட அறிக்கையில்,”தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வருவதால், இதுபற்றி சென்னை மாநகராட்சியின் நிலைப்பாட்டையும், உண்மை நிலவரத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரு வழக்கில்  உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, அனுமதியின்றி நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பிறகு அ.தி.மு.க. ஆட்சியிலேயே, 2018 ஆம் ஆண்டில் பல்வேறு நகர்ப்புற சட்டங்களின் கீழ், விளம்பரப் பலகைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் அமைக்க ஏதுவாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களுக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான
நிலம் மற்றும் கட்டிடங்களில் விளம்பரங்கள் செய்யும் “ஏகபோக சூழல்” அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

இப்படியொரு சட்டத் திருத்தத்தை எதிர்த்து, சில விளம்பர நிறுவனங்கள் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு (வழக்கு எண்.6913/2019) தொடுத்தன. அவ்வழக்கில், சட்டத் திருத்தத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக புதிய விதிகளை உருவாக்க அ.தி.மு.க. அரசுக்கு உத்தரவிட்டது. மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 11.03.2020 அன்று கீழ்க்கண்டவாறு ஆணை பிறப்பித்தது.

அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உயர்நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு. மேற்படி உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் விளம்பரப் பலகைகள் நிறுவுவதை முறைப்படுத்த, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 2022-ல் உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு, இச்சட்டம் மற்றும் விதிகள் 13.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அடிப்படை நோக்கம் அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அறவே அனுமதிக்க கூடாது என்பதுதான். இச்சட்டத்திற்கு முரணாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது மட்டுமின்றி, சட்டத்தை மீறி விளம்பரப் பலகைகள் வைக்கும் உரிமைதாரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்த அடிப்படையில், கடந்த 6 மாதங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட, தடை உத்தரவிற்கு உட்படாத விளம்பரப் பலகைகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் ஆங்காங்கே சுமார் 697 விளம்பரப் பலகைகள் நீதிமன்ற தடையுத்தரவுகளால் சென்னை மாநகராட்சியால் அகற்ற இயலாத சூழலில் உள்ளன என்றாலும், அவற்றையும் அகற்றிட பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உரிய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை அடியோடு அகற்றுவதே தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்தத்தின் நோக்கம் என்பதை மேற்காணும் விளக்கத்தின் மூலம் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply