பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

2 Min Read
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

யாழ்ப்பாணம் – மருதங்கேணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில், போலீஸாருடன் வாய்த்தகராரு ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக  போலீஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

பரீட்சை மண்டபம் ஒன்றிற்கு அருகில் மக்கள் சந்திப்பொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் நடத்த முயற்சித்திருந்தார். பரீட்சை நிலையத்திற்கு அருகில் மக்கள் சந்திப்பை நடத்துகின்றமை குறித்து, பரீட்சை நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த போலீஸ் உத்தியோகத்தர்கள், போலீஸ் நிலையத்திற்கு அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, சிவில் ஆடையில் வந்த போலீஸ் அதிகாரிகள், விசாரணைகளை நடத்த முயற்சித்துள்ளனர். இதன்போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவில் ஆடையில் வந்த போலீஸ் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் போலீஸ் அடையாள அட்டையை கோரியுள்ளார். எனினும், போலீஸார் அதற்கு சாதகமான பதிலை வழங்காத நிலையில், போலிஸாருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, பரீட்சை நிலைய பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதாகாரிகள் இந்த விடயத்தில் தலையீடு செய்தனர். இதன்போது, அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

தன்னை மரியாதையுடன் பேசுமாறு, போலீஸ் அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிய போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் போலீஸ் அதிகாரி என்பதை உறுதிப்படுத்துமாறு கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தன் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கோரிய போதும், அதனை போலீஸார் நிராகரித்திருந்தனர். இந்த நிலையிலேயே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டிருந்தார்.

போலீஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை ஒன்று போலீஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வௌிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் விதித்திருந்தது. அத்துடன், சம்பவம் தொடர்பில் போலீஸாருக்கு வாக்குமூலம் ஒன்றை உடனடியாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

Share This Article

Leave a Reply