- கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அட்டைகளை வழங்க நான்கு வாரங்களில் சிறப்பு முகாம்களை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
- கல்வராயன் மலைப்பகுதியில் சாலை திட்டங்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான வசதிகள், மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவு.
- மலைவாழ் மக்கள் மீது வனத்துறை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை சகித்துக் கொள்ள முடியாது – உயர் நீதிமன்றம் .
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்.
- பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் .
கல்வராயன்மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை அரசு ஆவணங்களை வழங்க நான்கு வாரங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலை பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு , இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வராயன் மலை பகுதியில் சாலை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதியில் ஆம்புலன்ஸ் செல்ல ஏதுவாக சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தமிழ்மணி, தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசு நடவடிக்கை எடுக்கிறது. அரசின் கையில் மந்திரக்கோல் இல்லை. ஒரே இரவில் எல்லாம் முடிந்து விடாது. பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் வசதிக்காக இரு மினி பஸ்கள் இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அப்போது நீதிபதிகள், சாலைகள் இல்லை என கூறவில்லை. அவை வாகனங்கள் செல்லத்தக்க வகையில் முழுமையாக இல்லை . பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்ல முடியவில்லை. போலீசார் இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டுமானாலும் சாலை வசதி வேண்டும் எனவும், மலைவாழ் மக்கள் மீது வனத்துறை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்ய கூடாது என அறிவுறுத்த வேண்டும். அதை சகித்துக் கொள்ள முடியாது என்றனர்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இப்பணிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், மலைவாழ் மக்கள் மீது எந்த அதிகார துஷ்பிரயோகமும் செய்யக் கூடாது என வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், சாலைகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் நியமனம் போன்ற பணிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மலைப்பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அட்டைகளை வழங்க நான்கு வாரங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
கல்வராயன் மலை பகுதி மக்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிட வசதி ஏற்படுத்துவது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.