காதல் கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்ட நிலையில், வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா (21). அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வந்தார்.

இந்த நிலையில், இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதை அடுத்து பிரவீன் மெக்கானிக் வேலையை கைவிட்டு கால் சென்டரில் வேலைக்கு சேர்ந்தார். இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த ஷர்மிளாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை அடுத்து பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறிய ஷர்மிளா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். பின்னர், எழும்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்தனர்.

அதை தொடர்ந்து, ஷர்மிளா காதல் கணவர் பிரவீனின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்தினார். இதனிடையே, குடும்பத்தினரை உதாசீனப்படுத்தி விட்டு சென்ற ஷர்மிளா மீது அவரது குடும்பத்தினர் கடும் கோபம் அடைந்தனர். மேலும், ஷர்மிளாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி இரவு பள்ளிக்கரணை டாஸ்மாக் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பிரவீனை நோட்டம் விட்ட ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் பிரவீனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.

இதுதொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை மாம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த தினேஷ் (23) மற்றும் அவரது நண்பர்களான பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (18), ஜோதிலிங்கம் (25), சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த விஷ்ணுராஜ் (25), ஸ்டீபன்குமார் (24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனது காதல் கணவரை வெட்டிக் கொலை செய்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷர்மிளா போலீசாரிடம் தெரிவித்தார். இதை அடுத்து, மாமனார், மாமியாருடன் வசித்து வந்த ஷர்மிளா ஆணவக்கொலை செய்யப்பட்ட காதல் கணவன் பிரவீனை மறக்க முடியாமல் துடிதுடித்து வந்துள்ளார்.
அப்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஷர்மிளா யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளார். காதல் கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்ட நிலையில், வாழ்க்கையை வெறுத்த ஷர்மிளா கடந்த 14 ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஷர்மிளாவை மீட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் ஷர்மிளாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

காதல் கணவன் கொலை செய்யப்பட்ட நிலையில், மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரவீன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம், உருக்கமான கடிதம்;-
போலீசார் ஷர்மிளா தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது ஷர்மிளாவின் டைரியில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘‘என்னால் என் பிரவீன் இல்லாமல் இருக்க முடியல. நான் சாகப் போறேன்.

என் சாவிற்கு காரணம் துரைக்குமார், சரளா, நரேஷ், தினேஷ். பிரவீனை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. அவன் தான் எனக்கெல்லாம். அவன் தான் வேணும். நான் பிரவீன் கிட்ட போறேன், பிரவீன் எங்க போனாலும் நான் போவேன்.
இப்போ அவனை சாகடிச்சுட்டாங்க. அவன் இல்லாத இந்த லைஃப்பும் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்’’ என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

இதனிடையே ஷர்மிளா தனது கடித்தத்தில் கூறியிருப்பது போல், அவரது தாய், தந்தை மற்றும் பெரிய அண்ணன் உள்பட குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் ஷர்மிளாவின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறி பிரவீனின் பெற்றோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து பள்ளிக்கரணை போலீசார் பிரவீன் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, புகார் மனு அளித்தால் மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து பிரவீனின் பெற்றோர் நேற்று மதியம் 2 மணியளவில் பள்ளிக்கரணை போலீசாரிடம் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து, போலீசார் பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.