அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் மனோ தங்கராஜ் முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதை, திமுக அரசு தொடர்ந்து வருவது கண்கூடு. இப்போது ஒரு படி மேலாக, ஆவின் நிறுவனம், தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடக மாநில நந்தினி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ன விலைக்கு பால் கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரங்களை, அமைச்சர் மனோ தங்கராஜ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்தும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் பால் தட்டுப்பாடு என்று மக்கள் அவதிப்பட்டதை மறைத்து, ஆவின் நிறுவனத்தின் பால் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
கேள்வி கேட்டால் அவதூறு பரப்பும் வழக்கமுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ஏற்கனவே அவதூறு வழக்கு தொடர நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இந்தக் கேள்விகளுக்காவது அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.