மாஞ்சோலை எஸ்டேட் மூடல்? தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: TTV தினகரன்

1 Min Read
TTV தினகரன்

மாஞ்சோலை எஸ்டேட் மூடப்படும் நிலையில் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை எஸ்டேட்டிற்கான மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடையவிருக்கும் நிலையில், தலைமுறை தலைமுறையாக அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எண்ணற்ற அடக்குமுறை, சுரண்டல்களை எதிர்கொண்டு காலம் காலமாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதால், தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி சொந்தமாநிலத்திலேயே அகதிகளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலார்கள்

கூலி உயர்வு கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊர்வலம் சென்ற தொழிலாளர்கள் மீது இதே திமுக அரசின் காவல்துறை நடத்திய தடியடியில், தாமிரபரணி ஆற்றில் குதித்து 17 பேர் உயிரிழந்த துயரம் அரங்கேறி கால் நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் துளியளவும் மேம்படவில்லை என்பதை தற்போதைய சூழல் உணர்த்துகிறது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களைப் போல மாஞ்சோலை எஸ்டேட்டையும் தமிழக அரசே ஏற்று நடத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, தேயிலை பறிப்பதை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வேலையுடன், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை அரசே ஏற்று நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply