இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன இருவர் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கமுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளனர். அதன்பின் மணிவண்ணன் கஞ்சா வழக்கில் கைதாகி நாகபட்டினம் சிறையில் உள்ளார்.
கமுதி கொலை முயற்சி வழக்கில் பாலமுருகன், மணிவண்ணன் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த பாலமுருகனை, நீதிமன்ற நுழைவுவாயிலில் பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவர் நண்பருக்கு கஞ்சா வழங்குவதற்காக கஞ்சாவை குழாய் போன்று சுருட்டி மறைத்து வைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கேணிக்கரை காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பாலமுருகனை விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சாவை வாங்கி வந்துள்ளதும், சிறையில் இருந்து நீதிமன்ற விசாரணைக்கு வரும் நண்பர் மணிவண்ணனுக்கு கொடுக்க கொண்டு வந்ததும் தெரிய வந்தது. கஞ்சாவை ஆசன வாய்க்குள் மறைத்து சிறைக்கு கொண்டு செல்லும் வகையில் குழாய் வடிவில் கஞ்சாவை சுருட்டி மறைத்து கொண்டு வந்ததாகவும் பாலமுருகன் தெரிவித்துள்ளார். அதனையடுத்து பாலமுருகனை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.