தமிழ்நாடு முதலமைச்சர் இல்லம் உட்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உதகை அருகே உள்ள தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரை லவ்டேல் B2 காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மது போதையில் 108 அவசர சேவை மையத்திற்கு அழைத்து மிரட்டல் விடுத்ததாக காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் வயது (41). திருமணம் ஆகி 5 மாதத்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிராமப் பகுதியில் கூலி வேலை செய்து வரும் கணேசன் நாள்தோறும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டும் மது போதையில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்திற்கு அழைத்து தனக்கு உடல்நிலை சரியில்லை தன்னை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மது போதையில் தொடர்பு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நேற்று மாலை தனக்கு உடல்நிலை சரியில்லை தன்னை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறிய போது ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்ப முடியாது என கட்டுப்பாட்டு மையத்தில் கூறியதால் தமிழக முதலமைச்சரின் இல்லம் உட்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக 108 அவசர சேவை மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
உடனடியாக அவசர சேவை மையத்திலிருந்து சென்னை தலைமை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு புகார் அளித்ததன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கணேசனை கைது செய்து வழக்கு பதிவு செய்து லவ்டேல் b2 காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தான் மதுபோதையில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்திற்கு அழைத்து தொடர்பு கொண்டதாக கூறியுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.