தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருப்பது அதன் மூலம் பட்டாசுகள் தயாரிப்பது போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் அருகே பட்டரை கிராமத்தில் ஒரு வீட்டில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு பட்டாசுகள் தயாரிப்பதாக திருவள்ளூர் வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர், மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சுந்தராஜன் மகன் சசிக்குமார் (41) என்பவரின் வீட்டில் பட்டாசுகள், 25 கிலோ வெடி மருந்து மற்றும் பட்டாசு தயாரிக்க கலக்கப்படும் மூலப் பொருட்கள் என 100 கிலோ வெடி மருந்து பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பட்டாசு மற்றும் வெடி மருந்து பொருட்களை பறிமுதல் செய்து. இது சம்பந்தமாக சசிகுமாரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணையில் சசிகுமார் அரசு உரிமம் பெறாமல் பட்டாசு தயாரித்து வந்ததும் அவர் வெளியே இருந்து பட்டாசு தயாரிக்க மூல பொருட்களை வாங்கி வந்து வீட்டில் தயார் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மணவாளநகர், மேல்நல்லாத்தூர், பட்டறை உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் பட்டாசு தயாரிப்பது அதிகரித்துவருகிறது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட அபாயம் உள்ளதால் இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.