சென்னை கொரட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவர்களை வைத்து மொட்டை மாடியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்துள்ள காணொளி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கொரட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவர்களை வைத்து மொட்டை மாடியில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்துள்ள காணொளி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மாணவ மாணவியரை, இது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
தமிழகம் முழுவதும் சிதிலமைடைந்து இருக்கும் சுமார் பத்தாயிரம் அரசுப் பள்ளிக் கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவோம் என்று சொல்லிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பலமுறை நினைவுபடுத்தியும் அதனைப் பற்றிப் பேசுவதே இல்லை.

அதற்கு மேலாக, அரசுப் பள்ளி மாணவர்களை கழிப்பறைகள் சுத்தம் செய்ய வைப்பது, ஆபத்தான உயரத்தில் இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள், அரசுப் பள்ளி மாணவ மாணவியரை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்தி வருவதை வெளிப்படையாக்குகின்றன.
பல தலைவர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கிய அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது ரசிகர் மன்றப் பணிகள் நடுவே, தனது துறை ரீதியிலான பணிகளையும் கவனிப்பது நல்லது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.