ஆளுநரின் போக்கு மாநில அரசின் உரிமைகளில் தேவையற்ற தலையீட்டை உள்நோக்கத்தோடு செய்கிறார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை தமிழ்நாடு ஆளுநர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இக்குழுவில் உள்ள உறுப்பினர்களை நியமிக்கும் போது ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்கவில்லை. மேலும் இதுவரை இல்லாத நடைமுறையாக பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியாக எச்.சி.எஸ்.ரத்தூரை ஒரு உறுப்பினராக நியமனம் செய்தார்.

தமிழ்நாடு அரசு இந்த போக்கை வன்மையாக கண்டித்ததோடு, தமிழ்நாடு மாநில உயர்கல்வி செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் இருந்து பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் ரத்தோரை நீக்கி அரசு இதழில் அறிவிப்பு வெளியிட்டார். தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெறக் கோரி உயர்கல்வி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநரின் இத்தகைய போக்கு மாநில அரசின் உரிமைகளில் தேவையற்ற தலையீட்டை உள்நோக்கத்தோடு செய்கிறார் என்பதை உறுதி செய்கிறது. ஆளுநரின் இத்தகைய செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது. இப்பிரச்சனையில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கிறது”என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.