உழைக்கும் மக்களுக்கு “தி நியூஸ் கலெக்ட்” மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது….

2 Min Read
மே நாள்

தலையங்கம்..

- Advertisement -
Ad imageAd image

என்ன வேலை செய்கிறோம், எவ்வளவு நேரம் செய்கிறோம், அதெல்லாம் தெரியாது உணவு கொடுத்தார்களா போதும். நாளைக்கு உணவுக்கு, வேலை செய்தால் கொடுப்பார்கள். இப்படித்தான் அறியாமையில் தொடர்ந்து கால்நடைகளை போல உழைத்துக் கொண்டிருந்த இனம் மனித இனம்.


ஓய்வில்லாமல், உறக்கமில்லாமல், ஏன்? உழைக்க வேண்டும் என்கிற கேள்வி மனிதனுக்குள்ளே எழுந்தது. நம்முடைய உழைப்பு எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை உணரத் தொடங்கினான் மனிதன். இனியும் இப்படி தேவையில்லாமல் உழைக்க தேவையில்லை உழைப்புக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது அந்த மதிப்பை பெற வேண்டும் என்கிற பகுத்தறிவு மனிதனுக்குள் தோன்றத் தொடங்கியது.

ஆம் போராட்ட குணம் இயற்கையாகவே மனித இனத்தில் இருந்தாலும் கூட, உழைப்பாளர்கள் மத்தியில் அது துளிர்க்கத் தொடங்கிய நாள் 1886 ஆம் ஆண்டு அமெரிக்க சிகாகோ நகரில் மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. இனி எட்டு மணி நேரம் தான் வேலை செய்வோம் அதற்கு உடன்பட்டால் தொழிற்சாலைகளை நடத்துங்கள் என்கிற முழக்கம்.


1889 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி பாரிஸில் நடந்த சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்ற கூட்டத்தில் 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்றும், 1890 ஆம் ஆண்டு மே 1 ம் தேதி உலக அளவில் தொழிலாளர்கள் நாள் கொண்டாடப்படுவது, என்றும். அந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலின் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மே ஒன்று தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது.

1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்ட ”மெட்ராஸ் லேபர் யூனியன்” தான் இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பு. கம்யூனிஸ சிந்தனைகளில் பேரார்வம் கொண்டிருந்த சிங்காரவேலர்தான் இந்தியாவின் பொதுவுடைமை இயக்க வளர்ச்சியில் மெட்ராஸ் மாகாணத்தில் பெரும் பங்கு வகித்தவர்.


எட்டு மணி நேரம் வேலை என்கிற அந்த உரிமையை வென்றெடுக்க பல்லாயிரம் பேர்களை நாம் இழக்க வேண்டி இருந்தது.அந்த நிகழ்வு இப்போது நினைவு கூற வேண்டிய ஒன்று. அப்படி போராடி, நமக்கான உரிமையை வென்று கொடுத்த அந்த தொழிலாளர் தியாகிகளுக்கு இந்நாளில் செவ்வணக்கம் செலுத்துவோம்.

உலகெங்கும் வாழும் உழைப்பு சுரண்டலுக்கு எதிரான ஒரு கூட்டமாக தொழிலாளர் கூட்டம் இன்று வரை திகழ்ந்து வருகிறது. நாடும், அரசும் வளர்ச்சியை நோக்கியே செல்ல வேண்டும் அதுதான் ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு எடுத்துக்காட்டு. அந்த வகையில் இந்தியா குறிப்பாக தமிழ்நாடு விருப்பப்பட்டால் 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்கிற மசோதாவை இயற்றி அதை தற்போது நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்த நாளில் தொழிலாளர்கள் சார்பில் நாம் கேட்டுக் கொள்வது உடனடியாக அந்த மசோதாவை திரும்பப் பெறு தமிழ்நாடு அரசே! என்பதுதான். வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது ஒரு அடிமைத்தனத்திற்கு அறைகூவல் விடுப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. எட்டு மணி நேர உழைப்பை இன்னும் கூட ஒரு மணி நேரம் குறைத்தால் மன நிம்மதியோடு உழைப்பார்கள் உழைப்பாளிகள். தமிழக அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் என நினைக்கிறோம் இல்லையென்றால் புரிந்து கொள்ள வைக்கலாம்.
அனைவருக்கும் ”தி நியூஸ் கலெக்டின்” மே தின வாழ்த்துக்கள்….

ஜோதி நரசிம்மன்

ஆசிரியர்

Share This Article

Leave a Reply