- சென்னை, அக்.24- மகளிர் சிறப்புச் சிறைகளுக்குப் பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு மற்றும் சிறைத்துறை டிஜிபி பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர், கோவை, சேலம் மற்றும் மதுரையில் மகளிர் சிறப்புச் சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சிறைகளுக்குப் பெண் கண்காணிப்பாளர்களையே நியமிக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மகளிர் சிறைகளின் கண்காணிப்பாளர்களாக ஆண் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால், பெண் கைதிகளால் தங்களது குறைகளைச் சொல்ல முடியாத நிலை இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகளிர் சிறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அரசு ப்ளீடர் எட்வின் பிராபகர், வேலூர் மகளிர் சிறையில் மட்டுமே ஆண் அதிகாரி இருப்பதாகவும், அந்த சிறைக்கும் விரைவில் பெண் அதிகாரி நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்தார். இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சிறைத்துறை டிஜிபி-க்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 14ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Leave a Reply
You must be logged in to post a comment.