பொய் வழக்கு தாக்கல் செய்ததாக, நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா, மறைந்த சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் கடந்த 2012 ஆம் ஆண்டு 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
இந்தக் கடனை திருப்பி செலுத்தும் வகையில் அளித்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக கூறி, முகுந்த் சந்த் போத்ரா தாக்கல் செய்த காசோலை மோசடி வழக்கில் இருந்து, கஸ்தூரி ராஜாவை விடுதலை செய்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.

இந்நிலையில், கடன் பெறும்போது அளித்த வெற்று காசோலையை தவறாக பயன்படுத்தியதாக முகுந்த் சந்த் போத்ராவுக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கை தாக்கல் செய்தார்.
முகுந்த் சந்த் போத்ராவுக்கு எதிரான இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, தங்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, இயக்குனர் கஸ்தூரிராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இயக்குனர் கஸ்தூரிராஜா தரப்பில், சட்டப்படி, பொய் வழக்கு தாக்கல் செய்ததாக கூறி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று, நீதிமன்ற அதிகாரி தான் வழக்கு தொடர முடியும் எனவும், தனி நபர் நேரடியாக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கஸ்தூரி ராஜாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.



Leave a Reply
You must be logged in to post a comment.