ஈரோடு அதிமுக நிர்வாகியை கரூருக்கு வரவழைத்து விசாரித்தனர். கரூர் மாவட்டம், அடுத்த வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது அளித்த ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நில அபகரிப்பு புகார் குறித்தும்,
மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல்காதர், போலி சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அளித்த புகார் குறித்தும் விசாரணை நடக்கிறது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் 29 நாட்களுக்கு மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளார். அவரது முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை பிடிக்க 5 தனிப்படையினர் கேரளா மற்றும் வடமாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
கடந்த 5 ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான தாளப்பட்டியில் உள்ள யுவராஜ், தோட்டக்குறிச்சியில் செல்வராஜ், கவுண்டம்பாளையத்தில் ஈஸ்வர மூர்த்தி ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

அதை தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி விஜயபாஸ்கரின் சென்னை, கரூர் வீடுகள், பெட்ரோல் பங்க், உதவியாளர்கள் வீடு என 8 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், கரூர் சின்னான்டாங்கோவிலில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகி கவின் (38) திருச்சியை சேர்ந்த சிபிசிஐடி அதிகாரிகள் 5 பேர் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது வீட்டில் கவின் இல்லை. குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். இதை அடுத்து ஏதாவது ஆவணங்கள் கிடைக்குமா என்று வீடு முழுவதும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை அடுத்து காலை 8 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
அதை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்களான ஈரோடு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைத்தலைவர் பசுபதி செந்தில் உள்பட 3 பேர் கரூர் தின்னப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் அங்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி வழக்கு தொடர்பாகவும், அவர் தொடர்ந்து தலைமறைவாக எங்கு இருக்கிறார் என்பது குறித்தும், சிபிசிஐடி போலீசார் 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.