IPL 2023, LSG vs SRH: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் கோப்பைக்காக களமிறங்கியுள்ளன.
முன்னதாக கொரோனா பரவல் காரண உள்ளூர் மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் இந்த ஐபிஎல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக நேற்று லக்னோவில் நடைபெற்ற ஹைதெராபாத்- லக்னோ விற்கு எதிரான போட்டியில் , மைதானம் முழுவதும் லக்னோ அணி ரசிகர்கள் குவிந்து காணப்பட்டனர்.
நேற்று நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதரபாத் அணியும் மோதிக்கொண்டன. லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தான் நினைத்ததைப் போல் தொடக்கம் ஓரளவிற்கு நன்றாக அமைந்தாலும், பவர்ப்ளேவிற்கு பிறகு போட்டி முழுவதும் லக்னோ அணியின் பக்கம் சென்றது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ஹைதராபாத் அணி இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. லக்னோ அணி சார்பில் குர்னல் பாண்டியா 4 ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவாக இருந்ததால், லக்னோ அணியின் 3 சுழற்பந்து வீச்சாளர்களும் தலா 4 ஓவர்கள் வீசினர். மற்றவர்கள் யாரும் 4 ஓவர்கள் வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் களமிறங்கிய லக்னோ அணி 16 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 127 ரன்களை எட்டியது. இதனால் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பந்து வீச்சில் அசத்திய குர்னல் பாண்டியா பேட்டிங்கிலும் அசத்தினார். அவர் 23 பந்தில் 34 ரன்கள் குவித்தார். தொடக்க வீரராக களமிறங்கிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 31 பந்தில் 35 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
லக்னோ அணி வெற்றி இலக்கை எட்டும் போது மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ரன்களுடனும் பூரான் 11 இறுது வரை தங்களது விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தனர். ஹைதரபாத் அணி தரப்பில் அடில் ரஷித் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால் 17 எக்ஸ்ட்ராக்களை ஹைதரபாத் அணியினர் வாரி வழங்கியுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. மேலும், இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 2இல் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபத் அணி இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.