ஜனவரி 26 ஆம் தேதி திருச்சியில் நடக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி முதலமைச்சருக்கு தொல். திருமாவளவன் நேரில் அழைப்பு விடுத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு தொல். திருமாவளவன் அளித்த பேட்டி பின்வருமாறு;
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டிசம்பர் 29 ஆம் தேதி வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. எனவே அந்த மாநாட்டை நடத்துவது குறித்து முதலமைச்சரை தேதி உறுதி செய்வதற்காக சந்தித்தோம். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சிகளின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். மத்திய அரசு தமிழக வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று புயல் வெள்ள பாதிப்புகளுக்காக ரூபாய் 21,000 கோடி சிறப்பு நிதி வழங்க வலியுறுத்தி வரும் 29 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என்றும், ஓட்டு சீட்டு முறையை நடைமுறை கொண்டுவர வேண்டும் என்றும், வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்க உள்ளோம். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்பேன். வெள்ள பாதிப்புகளின் போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பாரதிய ஜனதா தலைவர்கள் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மக்களின் துயரத்தையும் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தி, அவர்கள் அரசியல் செய்ய விரும்புகிறார்கள். அதில் திமுக அரசுக்கு எதிராக பேசி அரசியல் ஆதாயம் தேடுவதில் தான் குறியாக இருக்கிறார்கள். பேரிடர் காலத்தில் அரசியல் ஆதாயம் தேடும் வகையிலே கருத்து கூறுவது மிகவும் அற்பத்தனமான அரசியல். வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது முதலமைச்சர் இந்தியா கூட்டணி நிகழ்வில் மட்டும் கலந்து கொள்ளவில்லை. பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் பேரிடர் நிவாரண நிதியை கூறினார். குற்றம் சாட்டுவோர் அதையும் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அதன் மக்களையும் மத்திய நிதி மந்திரி எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார் என்பது பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அவரது உடல் மொழியில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. எந்த மாநிலத்தில் இது போன்ற இயற்கை பேரிடர் நிகழ்ந்தாலும் மக்களை காப்பாற்ற வேண்டியது மாநில அரசுக்கு மட்டும் இருக்கக்கூடிய பொறுப்பல்ல, மத்திய அரசுக்கும் அதில் பொறுப்பு உண்டு. உலகமே பேரிடராக கருதிய சுனாமியை நாங்கள் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என மத்திய அரசு கூறுவது பெருமைக்குரியது அல்ல. அவர்கள் எந்த அளவிற்கு மக்களின் மீது அக்கறை செலுத்துகிறார்கள் என்பதை அதில் இருந்து புரிந்து கொள்ளலாம். அவர்கள் ஆட்சி நடத்துவதற்கு அருகதை அற்றவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.