சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்மொழியை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் எனவும் திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்மொழியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசுக்குக் பல கடிதங்கள் எழுதியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் முன்னிலையிலேயே தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய உரையிலேயே ‘தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும’ என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களின் போது, தி.மு.க.கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, தி.மு.க.கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 16-வது பக்கத்தில் “4.உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக தமிழ்” என்ற தலைப்பில் “இந்தி அல்லது மாநில மொழிகள் உயர்நீதி மன்றங்களின் தீர்ப்புகளிலும் ஆணைகளிலும் பயன்படுத்தப்படலாம்” என அலுவலக மொழிகள் சட்டம், 1963 பிரிவு 7-ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக மாநில சட்டப்பேரவை தீர்மானம் இயற்றி, அது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டால். குடியரசு தலைவர் அந்த தீர்மானத்தை ஏற்று உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அலுவலக மொழிச்சட்டம் தெளிவாக கூறியுள்ளது.

இதற்கேற்ப, கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த நேரத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கிட வேண்டும் என்ற தீர்மானத்தை 6-12-2006 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியது. தொடர்ந்து, ஆளுநரின் பரிந்துரையுடன் இந்த தீர்மானம் 11-2-2007 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், இதுகாறும், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கிடும் தீர்மானத்தை, மத்திய அரசு உடனடியாக ஏற்று ஆணை பிறப்பிக்க கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்.” என வாக்குறுதி அளித்திருப்பதோடு, தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

எனவே, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் தங்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தை கைவிடக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.