- சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகள் முடக்குவதற்கு முன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அதை அனைத்து மாநில காவல்துறையும் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகத்துக்கு இடமான முறையில் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகக் கூறி, குஜராத், கேரளா,கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பிற மாநில போலீசாரின் உத்தரவின்படி தங்கள் வங்கிக் கணக்கை முடக்கியதை எதிர்த்து சென்னை கோபாலபுரத்தில் இயங்கி வரும் சிகேபிஎஸ் ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் அஜீத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகள் முடக்கும் முன் பின்பற்ற விதிகளை வகுத்து, அதை நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் பின்பற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ நடராஜன், வங்கிக் கணக்கு முடக்கம் செய்வதற்கு முன்பு நோட்டீஸ் கொடுத்து எதற்காக முடக்க போகிறோம், எந்த வழக்கில் முடக்கப் போகிறோம் என்று தகவல் தெரிவித்த பிறகு தான் முடக்க வேண்டும் என விதிமுறையை வகுக்க வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சைபர் கிரைம் காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.