இந்திய கடல்சார் துறையை வலுப்படுத்தவும், சிறந்த உள்கட்டமைப்புக்கும், புதுமை கண்டுபிடிப்புகளுக்கும் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வள அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. கடல்சார் துறையில் டிஜிட்டல் முன்னெடுப்பை மேலும் மேற்கொள்ளும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உயர் திறன் மிக்க உலகளாவிய வழிகாட்டும் செயற்கைகோள் முறையான ‘சாகர் சம்பர்க்’-கை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வள அமைச்சர் சர்பானந்த சோனாவால் இன்று தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனாவால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வள அமைச்சகம், பாதுகாப்பான கப்பல் வழிகாட்டுதலுக்கு உயர் முன்னுரிமை அளித்துள்ளதாக கூறினார். அண்மைக் காலங்களில் கப்பல் போக்குவரத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த முறையானது, பாதுகாப்பான பயணத்திற்காக கப்பல்களுக்கு மேலும் துல்லியமான தகவல்களை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பாக கப்பல்களை செலுத்துவதற்கு இத்தகைய உலகளாவிய வழிகாட்டும் செயற்கைகோள் முறையானது உதவும் என்றும், துறைமுகங்களில் விபத்துகளை தவிர்க்க உதவும் என்றும் கூறினார். கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க இயக்கத்திற்கும் இது உதவிடும் என்று சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.