கரூரில் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள தொழில் அதிபர் பிரகாஷின் 22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பிரகாஷின் நில பத்திரம் தொலைந்து போனதை, கண்டுபிடிக்க முடியவில்லை என சான்று வழங்கிய வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜ் இன்று சிபிசிஐடி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு கரூர் அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று காலை கரூர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரதிவிராஜ் சிபிசிஐடி போலீசாரால் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்.

இவருக்கு சொந்தமான ரூபாய் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே தன் மீதான வழக்குக்கு முன் ஜாமீன் கேட்டு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

தனது அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன் ஜாமீனை தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வந்தார். இதனிடையே கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை விசாரித்த நிலையில், கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் உத்தரவை தள்ளி வைத்து இருந்தனர்.

இதனிடையே கடந்த ஜூலை 5 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்பு உடையவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

கடந்த ஜூலை 6 ஆம் தேதி அன்று எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை விசாரணை செய்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவரது சகோதரர் சேகரின் முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் 14 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் அவரை தேடி வந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மோசடிக்கு துணையாக இருந்த வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.