தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை முன்னிட்டு, இன்று சென்னையில் உள்ள கடற்கரைகளில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு உற்சாகமாக கொண்டாடினர். இதேபோன்று சுற்றுலா தலங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் குவிந்து உள்ளன. இதனால் காணும் பொங்கல் சென்னையில் நேற்று களைகட்டியது.
இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டின. பொங்கலின் ஒரு பகுதியான காணும் பொங்கல் அன்று உற்றார் உறவினர்களை சந்தித்து அவர்களுடன் உண்டு மகிழ்வது தனி மகிழ்ச்சியானது. அதற்காக பொதுமக்கள் சுற்றுலா தலங்களில் கூடி பொழுதை கழிப்பது வழக்கம். மேலும், காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து விதவிதமான உணவுகள் மற்றும் பலகாரங்களை எடுத்து கொண்டு ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்கு சென்று ஆனந்தமாக உண்டும் பேசியும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில், நேற்று காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு இடங்களில் திரண்டு மகிழ்ச்சியாக கொண்டாடினர். சென்னையில் உள்ள கடற்கரைகளில் சாதாரண விடுமுறை நாட்களிலேயே மக்கள் கூட்டம் அலைமோதும். இன்று, காணும் பொங்கலையொட்டி காலை முதலே விதவிதமான உணவுகளை சமைத்து எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு பொதுமக்கள் வந்தனர். காலை முதலே மெரினா கடற்கரை, காந்தி சிலை, லைட் ஹவுஸ் அருகே மக்கள் குவிந்தனர்.
இதனால், மெரினா கடற்கரையில் நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகி கொண்டே சென்றது. திரும்பும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. இதனால் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது. கடற்கரை மணலில் சிறுவர், சிறுமிகள் பந்து விளையாடுவது, ஓடி பிடிப்பது, மணலில் வீடு கட்டுவது போன்ற விளையாட்டுகளை ஆடி குதூகலமாக இருந்தனர்.

மெரினாவில் அமைக்கப்பட்ட கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கினர். பொதுமக்கள் கடலில் இறங்கிவிடாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 6 உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணித்தனர்.
பாதுகாப்பு கருதி, இரவு 10 மணிக்கு மேல் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதியிலும், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் பூங்கா, மகாபலிபுரம், எம்ஜிஎம், கிஷ்கிந்தா, விஜிபி உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்களிலும் மக்கள் குவிந்தனர். பூங்காக்கள், கேளிக்கை மையங்கள் என பொழுது போக்கு இடங்களில் கூட்டம் திரண்டதால் காணும் பொங்கல் களைகட்டியது.

இதேபோன்று, பழவேற்காடு, வேடந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுலா மையங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட பல மடங்கு கூட்டம் திரண்டதால் பூங்காவே குலுங்கிப் போனது. நேற்று மட்டும் 25 ஆயிரம் பேர் பார்வையிட்டனர் என தகவல் வெளியாகின.
பொதுமக்கள் அங்குள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர். சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், மனித குரங்கு, ஒட்டகச்சிவிங்கி, குதிரைகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றை பார்த்தனர். உயிரியல் பூங்காவில் புதிதாக வந்துள்ள உயிரினங்களான இருவாச்சி பறவை, மலேயன் ராட்சத அணில், ஜம்முவிலிருத்து கொண்டு வரப்பட்ட இமாலயன் கருப்பு கரடி, சிவப்பு மார்பக கிளி ஆகியவற்றையும் கண்டுகளித்தனர்.

மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்ததை முன்னிட்டு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கோயம்பேடு, கிண்டி, சென்ட்ரல், திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னை கடற்கரைகளில் திரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. முக்கொம்பு, தஞ்சை பெரிய கோயில், ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் என பல சுற்றுலா இடங்களிலும் மக்கள் திரண்டு வந்து காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.