கோவையில் அதிக ஒலி எழுப்பியபடி பயணித்த தனியார் பேருந்துகளை பிடித்து, ஒலிப்பான்களை அகற்றிய போலீசார், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகள், வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ’ஏர் ஹாரன்கள்’ எனப்படும் ஒலிப்பான்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றை வாகனங்களில் பொருத்தி பயன்படுத்துவோர் மீது போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் பல தனியார் பேருந்துகளிலும் சட்டவிரோதமாக இது போன்ற அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தி, ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலைகளில் அதிக ஒலி எழுப்பும் இந்த ஒலிப்பான்களை பயன்படுத்துவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் இது போன்ற ஒலிப்பான்கள் ஒலிக்க விடப்படும் போது, பதற்றம் அடைந்து விபத்துகளில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த விபத்துகளை குறைப்பதற்காக அவ்வப்போது போலீசார் தனியார் வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே காட்டூர் காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வரும் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்களை நிறுத்தி ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தி இருந்த தனியார் பேருந்துகளில் இருந்து அவற்றை அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து பேருந்து உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
அடுத்த முறை இதேபோன்ற அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தால், சட்டரீதியான வழக்கு தொடுக்கப்படும் என ஓட்டுநர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.