கோவை மாவட்டம், அடுத்த அன்னூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (49). இவர் அதேபகுதியில் சிவ செல்வி என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல விற்பனைக்காக மளிகை கடையில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் தனலட்சுமியின் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் வந்து அவரின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று உள்ளார்.

இதுகுறித்து தனலட்சுமி அருகில் உள்ள அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பறித்து சென்ற தங்க சங்கலியை மர்ம நபர் அறுத்து சென்ற காட்சி சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் அன்னூர் அருகே குன்னத்தூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கோவையை சேர்ந்த பிலிப் மேத்யூ (23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் தனலட்சுமியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டார். இதை அடுத்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் மேத்யூ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.