கோவை மாவட்டம், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் அபிராமி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராமசாமி. இவர் இன்று நள்ளிரவு சுமார் 2:15 மணியளவில் வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டுள்ளது.
அப்போது சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சத்தம் வந்து கொண்டே இருந்ததால் என்ன நடக்கிறது என பார்ப்பதற்கு ராமசாமி வீட்டின் கதவை திறந்து உள்ளார். அப்போது கதவு திறக்க முடியாமல் இருந்ததால் சில நேரம் முயற்சித்துள்ளார்.

இருப்பினும் கதவை திறக்க முடியாததால் வீட்டில் உள்ள மின் விளக்குகளை போட்டுள்ளார். அப்பொழுது வீட்டின் வெளியே இருந்து மர்ம நபர் ஒருவர் காம்பவுண்ட் சுவர் ஏரி குறித்து தப்பிச் சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டிலிருந்தவர்களை சத்தம் போட்டு எழுப்பியுள்ளார்.
பின்னர் அனைவரும் இணைந்து கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கதவின் முன்பு உளி, ஸ்க்ரூ டிரைவர், பல் துளக்கும் பிரஸ் கீழே கிடந்துள்ளது. மேலும் கதவின் கீழ்புறம் கதவை திறப்பதற்கு அந்த நபர் முயற்சி செய்த தடயங்களும் இருந்துள்ளன.

இதனை பார்த்த வீட்டார் உடனடியாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யலாம் என்று முயற்சித்த போது சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டிருந்துள்ளது. உடனடியாக இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பொழுது ஒரு மர்ம நபர் முகமூடி அணிந்தபடி ஒரு சூட்கேஸ் உடன் வந்ததும் வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாவி குதித்து உள்ளே வந்தது தெரிய வந்தது.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபிராமி நகர் பகுதி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி உள்ள பகுதியாகும்.
சில தினங்களுக்கு முன்பு பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள பகுதியில் இதுபோன்று தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ராடுமேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

இந்த கொள்ளை முயற்சியும் ராடுமேன் கும்பலை சேர்ந்தவர்கள் செய்திருப்பார்களா என்ற கோணத்திலும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.