கேரள மாநிலம், எர்ணாகுளம், வலுவண்ணம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் சித்திக் என்பவர் சேலத்தில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் கோவை, பாலத்துறை பிரிவு வழியாக கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது சொந்த ஊரான எர்ணாகுளத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழுது இரண்டு இன்னோவா காரில் முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கட்டையால் தாக்கி பணத்தைக் கேட்டு உள்ளனர். அதில் நிலை தடுமாறிய அவர், மீண்டும் அவர் நான்கு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

அவர் சென்ற வாகனத்தில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவியில் அவரை தாக்க வரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் பரபரப்பு காட்சிகள் பதிவாகி உள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிய அஸ்லாம் சித்திக் இது குறித்தும் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியைச் சார்ந்த சிவதாஸ், ரமேஷ்பாபு, விஷ்ணு மற்றும் பாலக்காடு நல்லபள்ளியைச் சார்ந்த அஜய்குமார் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்துக்காக வேறொரு காரை வழிமறித்து வழிப்பறியில் ஈடுபடுவதற்கு பதிலாக தவறுகளாக இந்த வாகனத்தை நிறுத்தி தாக்கி உள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து, கோவை மதுக்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த பாலக்காடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவரை காவல்துறையினர் தற்பொழுது கைது செய்து உள்ளனர். மேலும் அதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.